Translate

Saturday, March 23, 2024

Experience is God: அனுபவமே கடவுள்

 வந்தவர்க்கெல்லாம் அருந்த, உண்ண கொடுப்பது முதல், பாரபட்சம் இல்லாத அன்பை வேலைக்கு வந்தவரிடமும் காண்பிப்பது, அனைவரும் உண்ட பின்னே தாம் என்று அன்பு காட்டிய அன்னை போதும் என்று சொல்லவில்லை என்றாலும் "போதும்" என்று கடவுளை அடைந்து இருதயத்தில் குடி கொண்ட என் அன்னைக்கும் இவ்  வாழ்க்கை சமர்ப்பனம்


ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இந்த கடைசி மகனை படிக்க வைத்து. அயல் நாட்டுக்கு செல்ல அனுமதித்து, அந்த வாழ்க்கையிலும் பங்குண்டு, திரும்ப வந்தவனை வழி நடத்தி, வாழ்க்கை நெறிகளை எடுத்து காட்டி, அமரர் ஆன என் தந்தைக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம். அன்னை  அப்பாவின்  பிரதிபலிப்பாய் நின்று என்னை வழி நடத்தி வந்து, வரும்  எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த நன்றி சமர்ப்பணம்


மருத்துவர் குலாம் ஐயா அவர்கள் எனது இங்கிலாந்து வாழ்க்கை மற்றும் திரும்பிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கூறினார். வெளி நாட்டுக்கு சென்று திரும்ப வரும் வாய்ப்பை பெற்றதால், நான் சில பாடங்களை , அனுபவங்களை  இந்த கட்டுரை மூலம் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன்


நம் கையே நமக்கு உதவி 


படிப்பே  பிரதானம் என்று இருந்த நான், நண்பர்களுடன் இங்கிலாந்தில் இருந்த காலத்தில், கூடி சேர்ந்து வாழும் வீட்டில் செய்யும் வீடு வேலையை சரியாக செய்யும் அவசியத்தை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொடுத்த எனது நண்பர்களிடம் , நன்றி சொல்ல விரும்புகிறேன். “இந்தியாவில் ஒரு நாள் எனது கார் டயர் மாற்றுதலை  நானே செய்யும் பொழுது, வியந்த நண்பரை பார்த்து நான் கேட்டேன், ஏன் இதில் என்ன ஆச்சர்யம்?.”  


பெட்ரோல் பங்கில் எரி பொருள் நிரப்புவது முதல், கார் டயர்களுக்கு காற்று நிரப்புவது, நம் வாழ்க்கை தேவையானவற்றை முடிவு செய்வது என்று  சுய சார்பு கல்வி வாழ்க்கை பாடமாக என்னுள் இறங்கியது இப்போது புரிகிறது. ஆனால் இந்த சுய சார்புத்தன்மை வெளி நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து வந்தது தானே! நீங்கள் கேட்கலாம், இந்தியாவில் வேறு இடத்தில் வசித்தாலும் கற்று கொண்டு இருப்பாய் என்று நீங்கள் சொல்லுவது காதில் விழுகிறது.


நேரம் தவறாமை


எனது அனுபவத்தில், ஆணித்தரமாக இறங்கிய இந்த பண்பு, இன்றைய நாளில், இந்த நமது தாயக வாழ்க்கையில்  ஒரு நோய் போல் ஒட்டிக்கொண்டது, இது நன்மையை தவிர தீமை இல்லை என்றால் மற்றவர் தான் எனக்கு சொல்ல வேண்டும். இந்த நேரம் தவறாமல் இருக்கும் பண்பு, நம்மை நெறிப்படுத்த ஏற்பட்டது என முதலில் நம்பினாலும், இது உண்மையிலேயே மற்றவரை மதிக்க கற்று கொடுத்தது என்று சொன்னால் மிகை ஆகாது


தினமும் எட்டு மணிக்கு ஆஸ்பத்திரி மருத்துவர் சந்திப்பு, குறிப்பிட்ட நேரத்தில் வேலை, நேரத்தில் வரும் ரயில் பயணம்  என்று பலவாறு, பதினைந்து வருட இந்த பழக்கம் இங்கிலாந்தில் என்னிடம் ஒட்டிக் கொண்டது என்றே சொல்லலாம். இன்றைய நாட்களில், சில  நேரங்களில் என்னை வருத்த படுத்தும் போல் இருந்தாலும், நான் இன்றும் அதை கடை பிடிப்பதன் காரணம், எனக்காக இல்லை, பிறரின் நேரத்தை மதிப்பதற்க்காவே என்று நம்புகிறேன். ஒவ்வொருவரும் இதை கடை பிடித்தால் நன்று.


நேர்மை 


இவர் நேர்மையான மனிதனப்பாஎன்று ஒருவரை வர்ணிப்பது என்பது உண்டு. இது ஒரு தனி மனிதரின் குணம் என்று கொண்டாலும், அது மற்றொருவரை பாதிப்பதில் தான் அதன் மதிப்பு இருக்கிறது. ஒரு மூத்த அறுவை சிகிச்சை நிபுணராக நான் இங்கிலாந்தில் இருந்தும், ஒரு இளைய மருத்துவர், நான் சொன்ன வேலையை செய்ய முடியாது என்று சொன்னார். இதை கேட்டு, எனது அகந்தை கொதித்து எழுந்தாலும், கட்டுப்படுத்தி, ஏன் செய்ய முடியாது என்று கேட்டேன்


அதற்கு, அந்த வேலையை எனக்கு செய்ய தெரியாது என்று சொன்ன போது, ஒரு நிமிடம் திகைத்து தான் போனேன். அவரது தெரியாமை தெரிந்து அல்ல, தெரியாது என்று சொன்ன நேர்மையை கண்டு. இங்கு அதே பண்பை நான் ஒரு நோயாளியிடம் அவரது பிரச்சினைக்கு எனக்கு காரணம் தெரிய வில்லை என்று நேர்மையாக கூறிய போது, அவர், ஏங்க நீங்க டாக்டர் தானே என்று அவர் திகைத்து தான் போனார்.


நன்றி மற்றும்......


ஒருவர் நமக்கு ஒரு  உதவி செய்யும் பொழுது, நன்றி என்று கூறிவிடுகிறோம். அதே சமயத்தில் வீட்டில் அம்மா நமக்கு உணவு செய்து கொடுப்பதில் இருந்து,அப்பா உறவினர் பொருள் மற்றும் பணம் கொடுத்து நமது வாழ்க்கையை மேம்படுத்தும் போதும்ஒருவர் நமக்கு சம்பளத்திற்கு வேலை செய்யும் போதும், நாம் அதை அவரவர் கடமையாக கருதி  நன்றி என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவது இல்லை தானே!. நன்றி என்பது இதயத்தில் இருந்தாலும் சொல்லுவதை வழக்கமாக கொள்வோமே? இங்கிலாந்தில் நன்றி, வருந்துகிறேன், மன்னிக்கவும், என்ற வார்த்தைகள் தினம் உபயோகப்படுத்தி வந்தேன்


இங்கிலாந்தில் ஒரு நோயாளியிக்கு ,நான் தையல் எடுக்கும் போது வலி ஏற்பட்டது. “உங்கள் வலிக்கு நான் வருந்துகிறேன்என்று நான் சொன்ன போது, “நீங்கள் உண்மையிலேயே உணர்ந்து சொல்ல வில்லை” என்று அந்த நோயாளி என்னை பார்த்து சொன்னதும் என் நினைவில் உள்ளது. வார்தைகளால் சொல்லா விட்டாலும், உணர்ந்து காண்பிக்கும் மொழிகளால் (sign language) மன்னிப்பையும் நன்றியையும் இந்தியாவில் பலர் சொல்வதையும் நாம் அறிந்து கொள்ளலாம். 


விதிகளை பின் பற்றவும் 


இங்கிலாந்தில் எனது ஓட்டுனர் உரிமம் பரீட்சை இரண்டாவதாக நான் எடுக்கும் போது, வந்த பரிசோதகர், நான் தோல்வி அடைந்ததை எழுத்து மூலம் கையெழுத்து இட்ட பிறகே என் முகத்தை பார்த்து, அடுத்த முறைக்கு வெற்றி பெற தனது விருப்பத்தை கூறினார். விதிகளை மதிப்பதில் ஆர்வம் என்பதை விட அதை தவிர வேறு வழி தெரியாத அந்த மனிதரை போல் நிறைய நபர்கள், எனது வாழ்க்கையை மெருகூட்டினார்கள். வரிசையை மீறாதது, பாதை நெறிகளை மீறாது வண்டி ஓட்டுவது என்று பலவாறு விதிகளை மதிப்பது என்பது எழுதப்படாத நெறிகளாக ஒட்டி கொண்டு விட்டது.  


இந்தியாவில் ராமர் என்ற எனது ஒரு நோயாளி விதிகளை மதித்து நடந்து கொண்டவர் ஆவர். சிகப்பு விளக்கு வந்தவுடன் தான் ஓட்டி  வந்த வண்டியை நிறுத்தியவர், பின் வந்த லாரி ஓட்டுநர், அந்த விதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மோதியதை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதே நேரம், விதிகளை நாம் தான் எழுதுகிறோம் என்பதை மறந்து விட்டு, சில நேரம் கண் மூடித்தனமாக பின் பற்றுவது சில நேரங்களில்,  சில இடத்திலும் காணலாம். நடை பாதையில் உள்ள ஒரு இருக்கைக்கு, இரண்டு நபர்கள் காவல் காத்து வந்தார்கள் வெகு நாளாக!. அதை பற்றி விசாரித்தபோது, இவ்வளவு வருடங்களாக பெயிண்ட் காயவில்லையா என்றார், மேலாளர்


பாகுபாடு 


Discrimination என்ற பாகுபாடு நம்மை மனதளவில் மற்றும் வாழ்க்கையை காயத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையாகும். பாகுபாடு கண்டு ஒருவர் மற்றவரை பிரித்து கையாளுவது மனித உறவுகளை பாதிப்பது ஆகும். இங்கிலாந்தில், கார் ஓட்டும் பொழுது, என் நிறம் மற்றும் இனம் கண்டு மோசமான  வார்த்தையை ஒருவர் உபயோகப்படுத்தியது எனது மனதில் பதிந்து உள்ளது. ஆனால், இவ்வாறு பாகுபடுத்துதல் நமக்கு ஒன்றும் புதிதும் அல்ல, மற்றும் எப்போதும் கேடு விளைவிப்பதும் அல்ல. விளையாட்டு, படிப்பு, வேலை தேர்வு என்று வாழ்க்கையில் பல இடங்களில் இவ்வாறு பாகுபடுத்தி பார்க்கப்பட்டு தான் ஒருவர் முன்னேறுகிறார் என்பது  உண்மையாகும்


இங்கிலாந்திலும் நான் படி படியாக வேளையில் முன்னேறியதும், மூத்த மருத்துவர் என்ற பதவியை பெற்றதும், எனது படிப்பின் மற்றும் வேலை திறன் அடிப்படியில் பாகுபடுத்தப்பட்டு தான் கிடைத்தது என்பதை உறுதியாக நம்புகிறேன். எனக்கு எங்கெல்லாம் வேலை மறுக்கப்பட்டதோ, அங்கெல்லாம் பாகுபாடு அடிப்படியில் பாதிக்க பாட்டேன் என நினைக்க தோன்றினாலும், மூடிய கதவை பார்க்காமல், புதிய கதவு ஒன்று திறந்ததை இன்று அறிவேன்.


பகுப்பாய்வு மனம் மற்றும் திறன் தொகுப்பு 


ராயப்பேட்டை மருத்துவமனையில் நான் பெற்ற பாடங்கள், ஆசிரியர்கள் , பேராசிரியர்கள், முக்கியமாக பேராசிரியர் மார்த்தாண்டம் போட்ட விதைகளாகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை திறனாகட்டும், பகுத்தாய்வு கொண்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் கிருமி தாக்குதல் பற்றி படித்ததாகட்டும், இவை இங்கிருந்து தான் என்னில் பதிக்கப்பட்டன


முழங்கால் மூட்டு பற்றிய எனது பகுப்பாய்வு படிப்பு மற்றும் அறிவியல்  வெளியீடு, லண்டன் மாநகரத்தில் இருந்து வெளி வந்தது. புதிய அறுவை சிகிச்சைகளை பற்றி அறிந்து செயல் திறன் பெற்ற பல அனுபவங்களை நான் நினைத்து பார்க்கிறேன். இவை எனது வாழ்க்கையில் ஏற்பட்டது ஒரு கொடுப்பினை என்று நம்புகிறேன். இந்தியா திரும்பி இந்த அனுபவங்களை உபயோகித்து சில நோயாளிகளின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.


இயற்கை, கலாச்சாரம், மொழி


இந்தியா திருப்பிய பிறகு, நான் இந்த இயற்கை தளும்பிய அழகிய கலாச்சாரம் நிறைந்த தாய் நாட்டை பொறுமையாக பார்க்கும் வாய்ப்பை பெரும் பேறாக எண்ணுகிறேன். ஒன்றை நாம் இழந்து திரும்ப பெரும் போது தான் அதன் மதிப்பை, அழகை, மிக்க மழிச்சியோடு பார்க்கிறோம் என்பது உண்மை தானே ! ஆங்கிலேய மொழியில் உறவாடி, கல்வி கற்று, நினைக்க மற்றும் வெளியீடு செய்யும் அளவுக்கு முன்னேறி பிறகு, நமது தமிழ் மொழியையும், நாட்டையும், பார்க்கும் பொழுது, மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்


ஆங்கிலேய மொழி எனக்கு அளித்த வாய்ப்பை நன்றியோடு நினைத்து பார்த்தாலும், ஆங்கிலேய மொழி சரளமாக இருப்பதால் மட்டும் ஒருவருக்கு அறிவு மற்றும் தொழில் திறன் இருக்கிறது என்று எண்ணி விடக்கூடாது. அதே நேரம் தமிழ் மொழியின் ஆழம் மிக பெரிது என்றும் தெரிந்து கொண்டேன். இன்னும் தெரிந்து கொண்டு இருக்கிறேன். தமிழ் எலும்பு மூட்டு கருத்தரங்கம் ஒட்டி மலர் ஒன்றில் கட்டுரை தமிழில் எழுத அன்பு கட்டளை குலாம் ஐயா மூலமாக கிடைத்தது.


அழகு , மகிழ்ச்சி, நட்பு, மற்றும் உறவு 


இங்கிலாந்து சென்று தங்கி இருந்த வாழ்க்கை, அழகாகவும், மகிழ்ச்சியாகவும், இருந்தது. இயற்கையை ரசிக்க தெரிந்தது. புதிய நட்புகளை கொடுத்தது. பல நாடுகளுக்கு சென்று புதிய அனுபவங்களை பெற உதவி செய்தது. நண்பர்களுடன் கூடி பெற்ற சுவையான நேரங்களை நினைத்தால் புல்லரிக்கிறது. சுவிற்சர்லாந்து நாட்டுக்கு விடுமுறை சென்று திரும்பி வந்து ஆங்கிலேயர் ஒருவரிடம் ஆச்சர்யப்பட்டு விவரிக்கும் பொழுது, இந்தியாவை நீ முழுதாய் பார்த்து விட்டு பிறகு என்னிடம் வந்து பேசு என்று முகத்தில் அறைந்தார் போல் கூறினார்.  


நினைத்து  பார்த்தால், பள்ளி பருவம், கல்லூரி பருவம், என்று இங்கிலாந்துக்கு முந்தைய வாழ்க்கை தேடுதலில் வேகமாக சென்று விட்ட மாதிரி தோன்றுகிறது. ஆனால்  யோசித்து பார்த்தால், பள்ளி வாழ்க்கை சுவாரஸ்யங்களும், கல்லூரி வாழ்க்கை நட்புக்களும், குடும்ப உறவுகள் இனிப்பான நினைவுகளும், மகிழ்ச்சி நமது மனதில் தான் இருக்கிறது என்பது புரிகிறது இப்போது

இந்தியா திரும்பி வந்த பிறகு எனக்கு என் நண்பர்களுடனும் குடும்பத்தினருடமும், செலவைவிட்ட இனிமையான தருணங்களை நான் இங்கிலாந்திலேயே இருந்திருந்தால் நான் இழந்து இருப்பேன்.


நினைவு கூறல் 


பள்ளி வாழ்க்கை நண்பர்களும், ஆசிரியர்களும், மனிதர்களும் தொலை தூர நினைவுகளாய் இருந்தும், சுவாரசியங்கள் அலைகளாய் வந்து செல்கின்றன.அறியா வயது சிறுவனாய் பொய் கூறியதும், நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் சண்டையும், பெற்றோர் மற்றும் உறவினருடன் அனுபவித்த சுகங்களும், அனைவரின் வாழ்க்கையிலும் இருக்குமே! கல்லூரி வாழ்க்கை படிப்பு தவிர மற்ற நிகழ்ச்சிகள், நண்பர்கள், ஆசிரிய பெருமக்கள், மனிதர்கள் என்று புரிந்தும் புரியா பருவம் அனைவர் வாழ்க்கையிலும் இருக்குமே. படித்து முடித்து இங்கிலாந்துக்கு செல்ல அடிக்கல் இட்ட எனது குடும்பத்தினர் போன்ற நல்ல உள்ளங்கள் அனைவரும் வாழ்க்கையிலும் இருக்குமே!. 


நான் இன்று எனக்கு பிடிக்குமாறு வாழ்க்கையையும், தொழிலையும் தொடர, எனக்கு வாய்ப்பளித்த எனது  சொந்தங்கள் மற்றும் காவேரி குடும்பங்களுக்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன் ,


நமது வாழ்க்கை பயணம் நமது கையில் தான் இருக்கிறது என்பது ஒரு மாயை ஆகும். முயற்சி தான் நம் கையில் உள்ளது. பயணம் வழி நடத்த படுகிறது. இது இந்தியா ஆகட்டும், இங்கிலாந்து ஆகட்டும், நல்ல  உள்ளம் கொண்ட மனிதர்களால் தான் எனது வாழ்க்கை நடக்கிறது என்று புரிந்து கொள்ள சில பத்தாண்டுகள் தேவை பட்டது. கண்ணதாசன் சொல்லியது போல இந்த அனுபவமே எனது கடவுள் ஆனது. அந்த கடவுளை நான் நினைவு கூறுகிறேன்.


'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!


கவிஞர் கண்ணதாசன் 


நன்றி வணக்கம் 


அன்புடன்

சொக்கலிங்கம்