Translate

Saturday, March 23, 2024

Experience is God: அனுபவமே கடவுள்

 வந்தவர்க்கெல்லாம் அருந்த, உண்ண கொடுப்பது முதல், பாரபட்சம் இல்லாத அன்பை வேலைக்கு வந்தவரிடமும் காண்பிப்பது, அனைவரும் உண்ட பின்னே தாம் என்று அன்பு காட்டிய அன்னை போதும் என்று சொல்லவில்லை என்றாலும் "போதும்" என்று கடவுளை அடைந்து இருதயத்தில் குடி கொண்ட என் அன்னைக்கும் இவ்  வாழ்க்கை சமர்ப்பனம்


ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இந்த கடைசி மகனை படிக்க வைத்து. அயல் நாட்டுக்கு செல்ல அனுமதித்து, அந்த வாழ்க்கையிலும் பங்குண்டு, திரும்ப வந்தவனை வழி நடத்தி, வாழ்க்கை நெறிகளை எடுத்து காட்டி, அமரர் ஆன என் தந்தைக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம். அன்னை  அப்பாவின்  பிரதிபலிப்பாய் நின்று என்னை வழி நடத்தி வந்து, வரும்  எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த நன்றி சமர்ப்பணம்


மருத்துவர் குலாம் ஐயா அவர்கள் எனது இங்கிலாந்து வாழ்க்கை மற்றும் திரும்பிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கூறினார். வெளி நாட்டுக்கு சென்று திரும்ப வரும் வாய்ப்பை பெற்றதால், நான் சில பாடங்களை , அனுபவங்களை  இந்த கட்டுரை மூலம் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன்


நம் கையே நமக்கு உதவி 


படிப்பே  பிரதானம் என்று இருந்த நான், நண்பர்களுடன் இங்கிலாந்தில் இருந்த காலத்தில், கூடி சேர்ந்து வாழும் வீட்டில் செய்யும் வீடு வேலையை சரியாக செய்யும் அவசியத்தை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொடுத்த எனது நண்பர்களிடம் , நன்றி சொல்ல விரும்புகிறேன். “இந்தியாவில் ஒரு நாள் எனது கார் டயர் மாற்றுதலை  நானே செய்யும் பொழுது, வியந்த நண்பரை பார்த்து நான் கேட்டேன், ஏன் இதில் என்ன ஆச்சர்யம்?.”  


பெட்ரோல் பங்கில் எரி பொருள் நிரப்புவது முதல், கார் டயர்களுக்கு காற்று நிரப்புவது, நம் வாழ்க்கை தேவையானவற்றை முடிவு செய்வது என்று  சுய சார்பு கல்வி வாழ்க்கை பாடமாக என்னுள் இறங்கியது இப்போது புரிகிறது. ஆனால் இந்த சுய சார்புத்தன்மை வெளி நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து வந்தது தானே! நீங்கள் கேட்கலாம், இந்தியாவில் வேறு இடத்தில் வசித்தாலும் கற்று கொண்டு இருப்பாய் என்று நீங்கள் சொல்லுவது காதில் விழுகிறது.


நேரம் தவறாமை


எனது அனுபவத்தில், ஆணித்தரமாக இறங்கிய இந்த பண்பு, இன்றைய நாளில், இந்த நமது தாயக வாழ்க்கையில்  ஒரு நோய் போல் ஒட்டிக்கொண்டது, இது நன்மையை தவிர தீமை இல்லை என்றால் மற்றவர் தான் எனக்கு சொல்ல வேண்டும். இந்த நேரம் தவறாமல் இருக்கும் பண்பு, நம்மை நெறிப்படுத்த ஏற்பட்டது என முதலில் நம்பினாலும், இது உண்மையிலேயே மற்றவரை மதிக்க கற்று கொடுத்தது என்று சொன்னால் மிகை ஆகாது


தினமும் எட்டு மணிக்கு ஆஸ்பத்திரி மருத்துவர் சந்திப்பு, குறிப்பிட்ட நேரத்தில் வேலை, நேரத்தில் வரும் ரயில் பயணம்  என்று பலவாறு, பதினைந்து வருட இந்த பழக்கம் இங்கிலாந்தில் என்னிடம் ஒட்டிக் கொண்டது என்றே சொல்லலாம். இன்றைய நாட்களில், சில  நேரங்களில் என்னை வருத்த படுத்தும் போல் இருந்தாலும், நான் இன்றும் அதை கடை பிடிப்பதன் காரணம், எனக்காக இல்லை, பிறரின் நேரத்தை மதிப்பதற்க்காவே என்று நம்புகிறேன். ஒவ்வொருவரும் இதை கடை பிடித்தால் நன்று.


நேர்மை 


இவர் நேர்மையான மனிதனப்பாஎன்று ஒருவரை வர்ணிப்பது என்பது உண்டு. இது ஒரு தனி மனிதரின் குணம் என்று கொண்டாலும், அது மற்றொருவரை பாதிப்பதில் தான் அதன் மதிப்பு இருக்கிறது. ஒரு மூத்த அறுவை சிகிச்சை நிபுணராக நான் இங்கிலாந்தில் இருந்தும், ஒரு இளைய மருத்துவர், நான் சொன்ன வேலையை செய்ய முடியாது என்று சொன்னார். இதை கேட்டு, எனது அகந்தை கொதித்து எழுந்தாலும், கட்டுப்படுத்தி, ஏன் செய்ய முடியாது என்று கேட்டேன்


அதற்கு, அந்த வேலையை எனக்கு செய்ய தெரியாது என்று சொன்ன போது, ஒரு நிமிடம் திகைத்து தான் போனேன். அவரது தெரியாமை தெரிந்து அல்ல, தெரியாது என்று சொன்ன நேர்மையை கண்டு. இங்கு அதே பண்பை நான் ஒரு நோயாளியிடம் அவரது பிரச்சினைக்கு எனக்கு காரணம் தெரிய வில்லை என்று நேர்மையாக கூறிய போது, அவர், ஏங்க நீங்க டாக்டர் தானே என்று அவர் திகைத்து தான் போனார்.


நன்றி மற்றும்......


ஒருவர் நமக்கு ஒரு  உதவி செய்யும் பொழுது, நன்றி என்று கூறிவிடுகிறோம். அதே சமயத்தில் வீட்டில் அம்மா நமக்கு உணவு செய்து கொடுப்பதில் இருந்து,அப்பா உறவினர் பொருள் மற்றும் பணம் கொடுத்து நமது வாழ்க்கையை மேம்படுத்தும் போதும்ஒருவர் நமக்கு சம்பளத்திற்கு வேலை செய்யும் போதும், நாம் அதை அவரவர் கடமையாக கருதி  நன்றி என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவது இல்லை தானே!. நன்றி என்பது இதயத்தில் இருந்தாலும் சொல்லுவதை வழக்கமாக கொள்வோமே? இங்கிலாந்தில் நன்றி, வருந்துகிறேன், மன்னிக்கவும், என்ற வார்த்தைகள் தினம் உபயோகப்படுத்தி வந்தேன்


இங்கிலாந்தில் ஒரு நோயாளியிக்கு ,நான் தையல் எடுக்கும் போது வலி ஏற்பட்டது. “உங்கள் வலிக்கு நான் வருந்துகிறேன்என்று நான் சொன்ன போது, “நீங்கள் உண்மையிலேயே உணர்ந்து சொல்ல வில்லை” என்று அந்த நோயாளி என்னை பார்த்து சொன்னதும் என் நினைவில் உள்ளது. வார்தைகளால் சொல்லா விட்டாலும், உணர்ந்து காண்பிக்கும் மொழிகளால் (sign language) மன்னிப்பையும் நன்றியையும் இந்தியாவில் பலர் சொல்வதையும் நாம் அறிந்து கொள்ளலாம். 


விதிகளை பின் பற்றவும் 


இங்கிலாந்தில் எனது ஓட்டுனர் உரிமம் பரீட்சை இரண்டாவதாக நான் எடுக்கும் போது, வந்த பரிசோதகர், நான் தோல்வி அடைந்ததை எழுத்து மூலம் கையெழுத்து இட்ட பிறகே என் முகத்தை பார்த்து, அடுத்த முறைக்கு வெற்றி பெற தனது விருப்பத்தை கூறினார். விதிகளை மதிப்பதில் ஆர்வம் என்பதை விட அதை தவிர வேறு வழி தெரியாத அந்த மனிதரை போல் நிறைய நபர்கள், எனது வாழ்க்கையை மெருகூட்டினார்கள். வரிசையை மீறாதது, பாதை நெறிகளை மீறாது வண்டி ஓட்டுவது என்று பலவாறு விதிகளை மதிப்பது என்பது எழுதப்படாத நெறிகளாக ஒட்டி கொண்டு விட்டது.  


இந்தியாவில் ராமர் என்ற எனது ஒரு நோயாளி விதிகளை மதித்து நடந்து கொண்டவர் ஆவர். சிகப்பு விளக்கு வந்தவுடன் தான் ஓட்டி  வந்த வண்டியை நிறுத்தியவர், பின் வந்த லாரி ஓட்டுநர், அந்த விதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மோதியதை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதே நேரம், விதிகளை நாம் தான் எழுதுகிறோம் என்பதை மறந்து விட்டு, சில நேரம் கண் மூடித்தனமாக பின் பற்றுவது சில நேரங்களில்,  சில இடத்திலும் காணலாம். நடை பாதையில் உள்ள ஒரு இருக்கைக்கு, இரண்டு நபர்கள் காவல் காத்து வந்தார்கள் வெகு நாளாக!. அதை பற்றி விசாரித்தபோது, இவ்வளவு வருடங்களாக பெயிண்ட் காயவில்லையா என்றார், மேலாளர்


பாகுபாடு 


Discrimination என்ற பாகுபாடு நம்மை மனதளவில் மற்றும் வாழ்க்கையை காயத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையாகும். பாகுபாடு கண்டு ஒருவர் மற்றவரை பிரித்து கையாளுவது மனித உறவுகளை பாதிப்பது ஆகும். இங்கிலாந்தில், கார் ஓட்டும் பொழுது, என் நிறம் மற்றும் இனம் கண்டு மோசமான  வார்த்தையை ஒருவர் உபயோகப்படுத்தியது எனது மனதில் பதிந்து உள்ளது. ஆனால், இவ்வாறு பாகுபடுத்துதல் நமக்கு ஒன்றும் புதிதும் அல்ல, மற்றும் எப்போதும் கேடு விளைவிப்பதும் அல்ல. விளையாட்டு, படிப்பு, வேலை தேர்வு என்று வாழ்க்கையில் பல இடங்களில் இவ்வாறு பாகுபடுத்தி பார்க்கப்பட்டு தான் ஒருவர் முன்னேறுகிறார் என்பது  உண்மையாகும்


இங்கிலாந்திலும் நான் படி படியாக வேளையில் முன்னேறியதும், மூத்த மருத்துவர் என்ற பதவியை பெற்றதும், எனது படிப்பின் மற்றும் வேலை திறன் அடிப்படியில் பாகுபடுத்தப்பட்டு தான் கிடைத்தது என்பதை உறுதியாக நம்புகிறேன். எனக்கு எங்கெல்லாம் வேலை மறுக்கப்பட்டதோ, அங்கெல்லாம் பாகுபாடு அடிப்படியில் பாதிக்க பாட்டேன் என நினைக்க தோன்றினாலும், மூடிய கதவை பார்க்காமல், புதிய கதவு ஒன்று திறந்ததை இன்று அறிவேன்.


பகுப்பாய்வு மனம் மற்றும் திறன் தொகுப்பு 


ராயப்பேட்டை மருத்துவமனையில் நான் பெற்ற பாடங்கள், ஆசிரியர்கள் , பேராசிரியர்கள், முக்கியமாக பேராசிரியர் மார்த்தாண்டம் போட்ட விதைகளாகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை திறனாகட்டும், பகுத்தாய்வு கொண்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் கிருமி தாக்குதல் பற்றி படித்ததாகட்டும், இவை இங்கிருந்து தான் என்னில் பதிக்கப்பட்டன


முழங்கால் மூட்டு பற்றிய எனது பகுப்பாய்வு படிப்பு மற்றும் அறிவியல்  வெளியீடு, லண்டன் மாநகரத்தில் இருந்து வெளி வந்தது. புதிய அறுவை சிகிச்சைகளை பற்றி அறிந்து செயல் திறன் பெற்ற பல அனுபவங்களை நான் நினைத்து பார்க்கிறேன். இவை எனது வாழ்க்கையில் ஏற்பட்டது ஒரு கொடுப்பினை என்று நம்புகிறேன். இந்தியா திரும்பி இந்த அனுபவங்களை உபயோகித்து சில நோயாளிகளின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.


இயற்கை, கலாச்சாரம், மொழி


இந்தியா திருப்பிய பிறகு, நான் இந்த இயற்கை தளும்பிய அழகிய கலாச்சாரம் நிறைந்த தாய் நாட்டை பொறுமையாக பார்க்கும் வாய்ப்பை பெரும் பேறாக எண்ணுகிறேன். ஒன்றை நாம் இழந்து திரும்ப பெரும் போது தான் அதன் மதிப்பை, அழகை, மிக்க மழிச்சியோடு பார்க்கிறோம் என்பது உண்மை தானே ! ஆங்கிலேய மொழியில் உறவாடி, கல்வி கற்று, நினைக்க மற்றும் வெளியீடு செய்யும் அளவுக்கு முன்னேறி பிறகு, நமது தமிழ் மொழியையும், நாட்டையும், பார்க்கும் பொழுது, மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்


ஆங்கிலேய மொழி எனக்கு அளித்த வாய்ப்பை நன்றியோடு நினைத்து பார்த்தாலும், ஆங்கிலேய மொழி சரளமாக இருப்பதால் மட்டும் ஒருவருக்கு அறிவு மற்றும் தொழில் திறன் இருக்கிறது என்று எண்ணி விடக்கூடாது. அதே நேரம் தமிழ் மொழியின் ஆழம் மிக பெரிது என்றும் தெரிந்து கொண்டேன். இன்னும் தெரிந்து கொண்டு இருக்கிறேன். தமிழ் எலும்பு மூட்டு கருத்தரங்கம் ஒட்டி மலர் ஒன்றில் கட்டுரை தமிழில் எழுத அன்பு கட்டளை குலாம் ஐயா மூலமாக கிடைத்தது.


அழகு , மகிழ்ச்சி, நட்பு, மற்றும் உறவு 


இங்கிலாந்து சென்று தங்கி இருந்த வாழ்க்கை, அழகாகவும், மகிழ்ச்சியாகவும், இருந்தது. இயற்கையை ரசிக்க தெரிந்தது. புதிய நட்புகளை கொடுத்தது. பல நாடுகளுக்கு சென்று புதிய அனுபவங்களை பெற உதவி செய்தது. நண்பர்களுடன் கூடி பெற்ற சுவையான நேரங்களை நினைத்தால் புல்லரிக்கிறது. சுவிற்சர்லாந்து நாட்டுக்கு விடுமுறை சென்று திரும்பி வந்து ஆங்கிலேயர் ஒருவரிடம் ஆச்சர்யப்பட்டு விவரிக்கும் பொழுது, இந்தியாவை நீ முழுதாய் பார்த்து விட்டு பிறகு என்னிடம் வந்து பேசு என்று முகத்தில் அறைந்தார் போல் கூறினார்.  


நினைத்து  பார்த்தால், பள்ளி பருவம், கல்லூரி பருவம், என்று இங்கிலாந்துக்கு முந்தைய வாழ்க்கை தேடுதலில் வேகமாக சென்று விட்ட மாதிரி தோன்றுகிறது. ஆனால்  யோசித்து பார்த்தால், பள்ளி வாழ்க்கை சுவாரஸ்யங்களும், கல்லூரி வாழ்க்கை நட்புக்களும், குடும்ப உறவுகள் இனிப்பான நினைவுகளும், மகிழ்ச்சி நமது மனதில் தான் இருக்கிறது என்பது புரிகிறது இப்போது

இந்தியா திரும்பி வந்த பிறகு எனக்கு என் நண்பர்களுடனும் குடும்பத்தினருடமும், செலவைவிட்ட இனிமையான தருணங்களை நான் இங்கிலாந்திலேயே இருந்திருந்தால் நான் இழந்து இருப்பேன்.


நினைவு கூறல் 


பள்ளி வாழ்க்கை நண்பர்களும், ஆசிரியர்களும், மனிதர்களும் தொலை தூர நினைவுகளாய் இருந்தும், சுவாரசியங்கள் அலைகளாய் வந்து செல்கின்றன.அறியா வயது சிறுவனாய் பொய் கூறியதும், நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் சண்டையும், பெற்றோர் மற்றும் உறவினருடன் அனுபவித்த சுகங்களும், அனைவரின் வாழ்க்கையிலும் இருக்குமே! கல்லூரி வாழ்க்கை படிப்பு தவிர மற்ற நிகழ்ச்சிகள், நண்பர்கள், ஆசிரிய பெருமக்கள், மனிதர்கள் என்று புரிந்தும் புரியா பருவம் அனைவர் வாழ்க்கையிலும் இருக்குமே. படித்து முடித்து இங்கிலாந்துக்கு செல்ல அடிக்கல் இட்ட எனது குடும்பத்தினர் போன்ற நல்ல உள்ளங்கள் அனைவரும் வாழ்க்கையிலும் இருக்குமே!. 


நான் இன்று எனக்கு பிடிக்குமாறு வாழ்க்கையையும், தொழிலையும் தொடர, எனக்கு வாய்ப்பளித்த எனது  சொந்தங்கள் மற்றும் காவேரி குடும்பங்களுக்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன் ,


நமது வாழ்க்கை பயணம் நமது கையில் தான் இருக்கிறது என்பது ஒரு மாயை ஆகும். முயற்சி தான் நம் கையில் உள்ளது. பயணம் வழி நடத்த படுகிறது. இது இந்தியா ஆகட்டும், இங்கிலாந்து ஆகட்டும், நல்ல  உள்ளம் கொண்ட மனிதர்களால் தான் எனது வாழ்க்கை நடக்கிறது என்று புரிந்து கொள்ள சில பத்தாண்டுகள் தேவை பட்டது. கண்ணதாசன் சொல்லியது போல இந்த அனுபவமே எனது கடவுள் ஆனது. அந்த கடவுளை நான் நினைவு கூறுகிறேன்.


'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!


கவிஞர் கண்ணதாசன் 


நன்றி வணக்கம் 


அன்புடன்

சொக்கலிங்கம்



Thursday, March 2, 2023

total hip replacement in tamil: இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி தமிழில் மருத்துவர் சொக்கலிங்கம் எழுதியது

 

இடுப்பு மூட்டைப் பற்றியும்  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றியும்  புரிந்துகொள்ளுதல்:

    ஆரோக்கியமான இடுப்பு:

                                      நமது உடலில் மூட்டுகள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேலான எலும்புகளின் முனைகள் சந்தித்துக்கொள்ளும் ஒரு அமைப்புகளாகும். இடுப்பு ஒரு " பந்துகிண்ண " மூட்டு ஆகும்.   

தொடை எலும்பின் மேல் முனை தான் அந்த பந்து. அது இடுப்புப் பகுதியிலுள்ள கிண்ணத்தோடு இணைகிறது.

சைனோவியம் என அழைக்கப்படும் அந்த மூட்டிலுள்ள படலம் அந்த மூட்டில் உராய்வு ஏற்படுவதை தடுப்பதற்கான உயவூட்டும் திரவத்தை தயாரிக்கிறது. குருத்தெலும்பு, எலும்புகளின் முனைகளை சுற்றியமைந்து, இடுப்பு மூட்டு மென்மையாகவும், எளிதாகவும் செயல்படுவதற்கான மெத்தை போன்று செயல்படுகிறது.

இடுப்பு தான் அதிகப்படியான எடையை தாங்கும் மூட்டுப் பகுதியாகும்.

இதனால் உங்கள் கால்களை மடக்கவும் நீட்டவும் அனுமதிக்கும் தசைகளும், பிணைத்தசைகளும் ஆதரவளிப்பதால் உங்களால் நடக்கவும் படிகளில் ஏறவும் முடிகிறது.

 

இடுப்பு பந்து கிண்ண மூட்டு பிரச்சினைகள்

 

       நோய்வாய்ப்பட்டுள்ள இடுப்பு அல்லது காயம் ஏற்பட்டுள்ள இடுப்பு சாதாரண அசைவுகளைக் கூட வலியுடையதாக மாற்றிவிடக்கூடும்.மற்றும் வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தையும் கெடுத்து விடும்.

 

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சையாளர் சேதப்பட்டுள்ள அல்லது நோய்வாய்ப்பட்டுள்ள உங்கள் இடுப்பு மூட்டுப் பகுதியை நீக்கிவிட்டு ஒரு புதிய செயற்கைரீதியாக தயாரிக்கப்பட்ட உறுப்புகளை உள்வைக்கும் முறையாகும்.

 

 

இடுப்பு வலி ஏற்படுத்தக்கூடிய மற்றும் இடுப்பு செயல்பாடுகளை இழக்கச் செய்யக்கூடிய பொதுவான காரணங்கள்:

 பின்வருபவை இடுப்பு வலி ஏற்படுத்தக்கூடிய மற்றும் இடுப்பு செயல்பாடுகளை இழக்கச் செய்யக்கூடிய காரணங்களாகும்:

 

 

1. ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் -இது மூட்டுகளிலுள்ள குருத்தெலும்பு மூட்டுக்களில் உங்கள் மூட்டுகளின் முனைகளை சுற்றிப் பாதுகாக்கும் வளைந்து கொடுத்து மடங்கக்கூடிய இணைப்புத் திசு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து, எலும்புகளின் மேற்பரப்புகள் ஒன்றோடொன்று நேரடியாக உராசி தேயச்செய்கிறது.

 

2. முடக்கு வாதம் ருமட்டாய்டு  ஆர்த்ரைட்டிஸ் தமது சொந்த உடலின் அணுக்கள் மற்றும் திசுக்களை தடுப்பாற்றல் மண்டலம்

தாக்குவதால் ஏற்படும் ஒரு நோயாகும். முடக்கு வாதம் உள்ள நோயாளிகள் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் எந்தவித பாரமும் கொடுக்கப்படாமல் ஓய்வு நிலையில் இருக்கும் போது கூட தீவிரமான வலியை அனுபவிப்பார்கள்.

  

3. காயம்-விபத்து அல்லது காயம். மூட்டு விலகுதல் மற்றும் மூட்டு எலும்பு பகுதிகள் உடைந்த பிறகு வரும் தேய்மானம்.

 

4. ஏவாஸ்குலர் நெக்ரோசிஸ்-இது எலும்புத் திசுக்களுக்கு இரத்த ஓட்டம் கிடைக்காமல் போவதால் ஏற்படும் ஒரு கோளாறு ஆகும்.

 

 

 

 

       பாதிக்கப்பட்டுள்ள இடுப்பு:

    இயல்பாக முதுமைப் படுவதால் ஏற்படும் தேய்மானம் மற்றும் கிழிதல் ஆகிய காரணங்களால் அல்லது ஒரு விபத்தினால் இடுப்பில் பாதிப்பு ஏற்படலாம்.

பொதுவாக இடுப்பு பாதிப்பு பந்துக் கிண்ண மூட்டில் ஏற்படும்.

சேதமடைந்துள்ள இடுப்பு மிகவும் வலி உள்ளதாகவும் மற்றும் உங்களுடைய வாழ்க்கையின் தரத்தையும் குறைத்து விடலாம். 

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை உங்களுக்கு எப்படி உதவும்?

நோய்வாய்ப்பட்டுள்ள அல்லது காயமடைந்துள்ள இடுப்பு கடுமையான வலியை ஏற்படுத்தியும், அசைவுகளைக் கட்டுப்படுத்தி மற்றும் வாழ்கையின் தரத்தையும் குறைத்துவிடுகிறது.

 

 

      இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு முக்கியமான தேவைகள்  இருக்கின்றன:

    a. வலி நிவாரணம்.

    b .இடுப்பு மூட்டு செயல்பாடு மேம்படுவதற்கு.

 

a. வலி நிவாரணம்

   குருத்தெலும்பு சேதமடைவதால் இடுப்பில் ஏற்படும் வலிக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிவாரணம் அளித்து வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது. புதிய இடுப்பை வைப்பதன் மூலம் நோய்வாய்ப்பட்டுள்ள   முதலாவதான இடுப்புடன் சம்பந்தப்பட்டிருக்கும் வலி முடிந்து போகிறது. இது உங்களுக்கு ஒரு சிறந்த நிவாரணத்தை வழங்கி உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நிலையை மேம்படுத்துகிறது.

 

b.வாழ்க்கைத் தரம் மேம்படுதல்

      மாற்று இடுப்பை வைப்பதன் மூலம் உங்களால் கூடிய விரைவில் வலியின்றி எளிதாக நடந்து சுற்றி வர முடியும்,  உங்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்படும். இது வழக்கமான தினசரி செயல்பாடுகளை நீங்களே செய்துகொள்ள உதவும். மேலும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தோஷத்துடன் அனுபவிக்க ஆரம்பிக்கலாம்.

 

 

         இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு தயாராகுதல்

A. உடல் ஆரோக்கியம்

      எந்தவொரு அறுவை சிகிச்சையுடனும் இருப்பது போலவே, இந்த அறுவை சிகிச்சைகாக நீங்களே உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியமாகும்.

     அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு முன்பே புகை பிடிப்பதை நிறுத்திவிட வேண்டும். புகை பிடிப்பதால் மாரடைப்பு, நுரையீரல் சீர்குலைவு, காயம் சேதமடைந்து தொற்றுநோய் ஏற்படுவது முதலிய ஆபத்துக்கள் அதிகரித்து விடுகிறது.

          உங்கள் மேல் கரங்களின் வலிமையை அதிகபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள் செய்வது பயனுடையதாகும்.ஏனென்றால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் மேல் கரங்களை நீங்கள் அதிகமாக உபயோகப்படுத்துவீர்கள்.

          கூடுதல் எடையை இழத்தல் - அது உங்கள் இடுப்பின் அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும். ஆனால் எடையை குறைப்பதற்கான திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக உங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். 

 

 

 B. சோதனைகள்:

          உங்கள் மருத்துவர் சில சோதனைகள் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்வார். அது உங்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்ய திட்டமிட உதவும். இந்த சோதனைகளில் இரத்த பகுப்பாய்வு, கார்டியோகிராம் மற்றும் அவசியமாயிருக்கிற வேறெந்த குறிப்பான சோதனைகளும் உட்படலாம்.

 

C.  மருந்துகள்:

         அறுவைச் சிகிச்சைக்கு முன்பான 7-14 நாட்களில் ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எடுப்பதை நிறுத்துமாறு உங்கள் அறுவைச் சிகிச்சை நிபுணர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம். எந்தவொரு மருந்தையும் கைவிடுவதற்கு முன்பாக உங்கள் சிகிச்சை மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

 

D.மற்ற ஆரோக்கியம் தொடர்பான நிலைமைகள்:

அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக உங்கள் பற்களுக்கான சிகிச்சை  முடித்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஏனென்றால்- தொற்றுநோயுள்ள பல் அல்லது ஈறு- புதிய இடுப்பில் தொற்றுநோயை ஏற்படுத்தலாம்.

 

 

உங்களுக்கான இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை:

     வழக்கமான இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சுமார் 2-3 மணி நேரங்கள் எடுக்கலாம்.

 

      அறுவைச் சிகிச்சை நடைமுறையை வலியில்லாமல் ஆக்குவதற்கும், உங்களுக்கு சௌகரியமானதாக இருக்கச் செய்வதற்கும் அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் உங்கள் மேல் தொடையில் தேவையான அளவுக்கு துவாரமிடுகிறார்.

 

     அதன் பிறகு உங்கள் தோலுக்கு அடியிலுள்ள பிணைப்புத்தசைகள் மற்றும் தசைகளை தனித்தனியாக பிரிக்கிறார்.அதன் பிறகு அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் சாக்கெட்டிலிருந்து தொடை எலும்பின் தலைப் பகுதியை பந்து கிண்ணத்திலிருந்து தனியாக பிரித்தெடுக்கிறார்.

  

  அந்த கிண்ணப் பகுதியிலிருந்து குருத்தெலும்பு நீக்கப்படுகிறது.மற்றும் அது செயற்கை உறுப்பு கிண்ணப் பகுதியை ஏற்றுக் கொள்ளுமாறு  வடிவு படுத்தப்படுகிறது.புதிய செயற்கை உறுப்பின் இந்தப் பகுதி வளைக்கப்பட்டு பிளாஸ்டிக் அல்லது செராமிக் கொண்டு முலாம் பூசப்பட்டிருக்கிற ஒரு உலோகத் துண்டாகும்.

 

   தொடை எலும்பின் தலைப் பகுதியை வைப்பதற்காக,முதலில் தொடை எலும்பின் தலைப் பகுதி பொருந்தும் வகையில் அந்தத் தொடை எலும்பை துளையிட்டு தொடை எலும்புக்கான தலைப்  பகுதியை வைக்கிறார்.

         தொடை எலும்பின் தலைப்பகுதிக்கு மாற்றாக ஒரு உலோக அல்லது செராமிக் பந்து அந்த எலும்புத் தண்டுடன் இணைக்கப்படுகிறது.

     அந்த செயல்முறை முடிந்தவுடன் அறுவைச் சிகிச்சைக்கான உலோக தைப்புக் கம்பிகளை வைத்து தையல் போடவும். அது அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 10-14 நாட்களில் நீக்கப்படுகிறது.

 

மருத்துவமனையில் குணமடைதல்:

        அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு

    நீங்கள் எழுந்திருக்கும் வரை நலம்பெறும் அறையில் இருப்பீர்கள்.

                  உங்கள் புதிய இடுப்பைப் பாதுகாக்க உங்கள் முட்டிகளுக்கு இடையில் ஒரு தலையணை வைக்கப்படும்.

          இரத்த உறைவு ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்காக உங்கள் கால்களுக்கு உறைகள் வழங்கப்படும்.

 மருத்துவமனையில் தங்கியிருத்தல்

      மருத்துவமனையில் தங்கியிருப்பது 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கலாம்.

             உங்களுக்கு கொஞ்சம் வலி இருக்கும் எனவே வலிக்கான மருந்துகள் கொடுக்கப்படும். இது உங்கள் வலியை குறைத்து முடிந்தவரை சௌகரியமாக உணரச் செய்யும்.

             ஆரம்ப கட்டத்தில், நீங்கள் குணமடைவதற்காக அசைந்து செயல்படுவது முக்கியமானதாகும்.

அசைவது பின்வருபவைக்காக உதவும்:

           1. வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.

           2. நிமோனியா மற்றும் இரத்த உறைவுகள் ஏற்படுவதை தடுக்க உதவும்.

 

 

ஒரு இயன் முறை  பயிற்சிப்பாளர் (physiotherapist ) அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அடுத்த நாளன்று உங்களை சந்தித்து மாற்றி வைக்கப்பட்ட இடுப்பில் நீங்கள் எவ்வளவு எடை போட வேண்டும் என்று உங்களுக்கு கற்பிப்பார்.

 

 நீங்கள் சுதந்திரமாக நடக்கவும்; நாற்காலி, கார் போன்றவற்றில் உட்கார்ந்து எழுந்திருப்பதற்காகவும்; மாடிகளில் ஏறி இறங்குவதற்காகவும் ஒரு ஊன்றுகோல் அல்லது நடப்பதற்கான சாதனத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதும் உங்களுக்கு கற்பிக்கப்படும்.

 

வீட்டில் குணமடைதல்

   மருத்துவமனையிலிருந்து வெளியனுப்பப்படும் போது, நடத்தல்,படுக்கையில் படுத்தல் மற்றும் எழுந்திரித்தல், கழிவறைக்கு செல்லுதல் ஆகிய செயல்பாடுகளை உதவியின்றி செய்வதற்கு கொஞ்சம் வலிமையைப் பெற்றிருப்பீர்கள்.

   உங்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிற படி மருந்துகளை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்கிறீர்கள்  என்பது முக்கியமானதாகும்.

       இயன் முறை  பயிற்சிப்பாளர் (physiotherapist )  வழிகாட்டப்பட்டியா படி  ஊன்றுகோல் அல்லது நடப்பதற்கான சாதனம் உபயோகித்து நடப்பதை தொடருங்கள். எடையை தாங்கிக்கொண்டு முடிந்தவரை சௌகரியமாக நடங்கள், நடப்பது தசைகளை வலிமைப்படுத்தும்.

    மருத்துவமனையில் செய்து கொண்டிருந்ததைப் போல உடற்பயிர்ச்சிகளைத் தொடருங்கள்.

 

A. வீட்டுக்கு திரும்பிய பிறகு சௌகரியமாக இருப்பதற்கான குறிப்புகள்

   1. உங்கள் வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

   நீங்கள் ஊன்றுகோல் அல்லது நடப்பதற்கான சாதனத்தை கொண்டே நடப்பீர்கள் என்பதால், வீட்டைச்  நடப்பது, கடைக்கு செல்வது, சிறு தூரத்திற்கு நடந்து கொடுப்பது அல்லது குளிப்பது ஆகிய வேலைகளைச் செய்வதற்காக உங்களுக்கு

 

உதவி தேவைப்படலாம்.வீட்டுக்கு திரும்பிய பிறகு குணமடைவது சௌகரியமாக இருப்பதற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

   2.உங்கள் வீட்டை திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்

   நீங்கள் அறுவைச் சிகிச்சைக்காக செல்வதற்கு முன்னால் உங்கள் வீட்டை தயார்செய்து/ ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். கம்பிவடங்கள் ஏதும் கீழே கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் படுக்கை அறை மாடியில் இருந்தால், உங்கள் முன் அறையிலேயே படுத்துக் கொள்வதற்காக ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். இது தினமும் நீங்கள் மாடி ஏறுவதை தவிர்க்க உதவும்.

உங்கள்  இடுப்பு உண்மையான இடுப்பை விட எப்படி வித்தியாசமானது?

பிரச்சனை எழுவதற்கு முன்பாக உங்களால் செய்ய முடிந்ததை விட அதிகமாக செயல்படுவற்கு உதவாது.

   புதிய இடுப்பைப் பெற்ற பிறகு எஞ்சியிருக்கும் உங்களுடைய வாழ்க்கை முழுமைக்கும், காலையில் ஊடுதல் மற்றும் அதிக-தாக்கம் உள்ள விளையாட்டுகளை விளையாடுதல் உட்பட சில செயல்பாடுகளை நீங்கள் தவிர்க்க வேண்டியதிருக்கலாம்.ஏனென்றால் அது மூட்டு இட மாறிவிடுவதற்கு  கொண்டு செல்லக்கூடும். இது பற்றி தங்களுக்கு அறுவை செய்த மருத்துவர் அறிவுரை செய்வார்.

 

 நீங்கள் குணமடையும் போது செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

   நீங்கள் செய்யவேண்டியவை

    1. மருத்துவர்களால் கூறப்பட்டுள்ள படி உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

         2. உங்கள் அறுவைச் சிகிச்சை நபர் வேண்டாம் என கூறும் வரை உங்களுக்கான வெள்ளை கால் உறைகளை அணிந்து கொள்ளுங்கள்.

        3.அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை சுத்தமாகவும் உலர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ளுங்கள்.

       4.வெட்டப்பட்ட இடத்தில் வீக்கம்,வலி, சிவந்திருத்தல் அல்லது சீல் வடிதல் ஆகியவை இருந்தால் அல்லது காய்ச்சல் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவருக்கு தெரிவியுங்கள்.

       5. கட்டுப் போடும் போது, முதலில் அறுவைச் சிகிச்சை செயப்பட்ட இடத்திற்கு கட்டு போடவும்.

    

 

நீங்கள் செய்யக்கூடாதவை

        1. 90 degree கோணத்திற்கு மேல் க்கு இடுப்பை வளைக்காமல் வாழ்க்கையில் நமது வேலைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இயன் முறை  பயிற்சிப்பாளர் (physiotherapist ) கற்பிப்பார்

        2.உங்கள் புதிய இடுப்புக்கு மேல் உயரமாக முழங்காலை தூக்காதீர்கள்.

        3.முழங்காலை அல்லது கணுக்கால்களை பிணைத்து வைக்காதீர்கள்.

        4.எடை பளு தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

        5.அறுவைச் சிகிச்சைக்கு பின்பான முதல் 12 வாரங்களுக்கு கடினமான வீட்டு வேலைகள் அல்லது தோட்ட வேலைகளை தவிர்த்திடுங்கள்.

        6.முட்டி போடுவதை தவிர்க்கவும்.

        7.குளியல் தொட்டியில் உட்காராதீர்கள்.

       8.வழக்கமான கழிவறையை உபயோகிக்காதீர்கள்; அது கீழாக இருக்கிறது எனவே அது பாதுகாப்பற்றது. Toilet seat raise என்ற ஒரு மாறுதலை வழக்கமாக உபயோகிக்கும் வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு செய்து உபயோகிக்க வேண்டியதின் அவசியத்தை தங்களுக்கு மருத்துவம் புரிய வைப்பார். இந்தியன் டாய்லட் முறையில் கழிவறை உபயோகிப்பது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்             

prophylactic surgery in Orthopaedics? Article by dr Chockalingam எலும்பு மூட்டு மருத்துவத்தில் முன் பாதுகாப்பு அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் சொக்கலிங்கம் எழுதியது

 click on this link👇👇


Prophylactic orthopaedic surgery (kauveryhospital.com)



👆👆மேலே உள்ள இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும்.  (Click ) செய்யவும்